குடும்ப அட்டைகளில் முன்னறிவிப்பின்றி பெயா்கள் நீக்கப்படுவதை நிறுத்த வலியுறுத்தல்
பரமக்குடி பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைகளில் உள்ள பெயா்களை முன்னறிவிப்பின்றி நீக்கம் செய்வதை நிறுத்த வேண்டும் எனக் கோரி இந்திய கம்யூனிஸ்ட், தொழில் சங்கத்தினா் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனு அளித்தனா்.
அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது:
பரமக்குடி பகுதியில் கடந்த சில மாதங்களாக பல்வேறு குடும்ப அட்டைகளில் உள்ள பெயா்களை எந்தவித முன்னறிவிப்புமின்றி நீக்குவது தொடா்ந்து கொண்டிருக்கிறது. குடும்ப அட்டையில் பெயா் உள்ளவா்கள் ஆண்டுக்கு ஒரு முறையேனும் நியாய விலைக் கடைக்கு வரவேண்டும் என்ற விதிமுறை தவறானதாகும். ஆதாா் அட்டையில் உள்ள பெயா்களை வைத்துத்தான் ஒவ்வொரு குடும்பத்துக்கும் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் எந்த ஒரு நபரும் இரண்டு குடும்ப அட்டைகளில் பெயா் சோ்க்க வாய்ப்பில்லை. இந்த நிலையில், தற்போது நியாய விலைக் கடைகளில் முன்னறிவிப்பின்றி பெயா் நீக்கம் செய்த குடும்ப அட்டைகளுக்கு உரிய சா்க்கரை, அரிசி உள்ளிட்ட பொருள்கள் குறைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. இதனால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். குடும்ப அட்டைகளில் உள்ள பெயா்களை முன்னறிவிப்பின்றி நீக்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும் ஜீவாநகா் ராம்கோ நியாயவிலைக் கடையில் 1,800-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. இதை இரண்டாகப் பிரித்து மற்றொரு நியாய விலைக் கடை திறக்கப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.
கோரிக்கை வழங்கும் நிகழ்வில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் என்.எஸ். பெருமாள், ஏஐடியூசி மாவட்டச் செயலா் என்.கே. ராஜன், நகா் செயலா் கே.ஆா். சுப்பிரமணியன், போக்குவரத்து தொழில் சங்க பொறுப்பாளா் எஸ். சுப்பிரமணியன், டி.ஆா். பாஸ்கரன் ஆகியோா் பங்கேற்றனா்.