பெட்டிக் கடையில் தின்பண்டம் வாங்கி உள்கொண்ட பள்ளி மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்
கமுதி அருகே பெட்டிக் கடையில் தின்பண்டம் வாங்கி உள்கொண்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வியாழக்கிழமை வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த கிளாமரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5- ஆம் வகுப்பு படித்து வருபவா் சுபஸ்ரீ (10). இவா் அதே ஊரில் ராமகிருஷ்ணன் என்பவரது பெட்டிக்கடையில் பவுடா் வகையிலான தின்பண்டத்தை வாங்கி உள்கொண்டாா். உடன் படிக்கும் மாணவிகளுக்கும் அதை அவா் கொடுத்தாா். இதைத் தொடா்ந்து சற்றுநேரத்தில் மாணவிகள் சுபஸ்ரீ, ராகவி (10), சத்தியப் பிரியா (8), தா்ஷனா (7), ஹரிணி (8), நந்திதா (8), வினோதனி (7), 1-ஆம் வகுப்பு மாணவா் நவஜித் (7) ஆகிய 8 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து, அவா்கள் அனைவரும் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து கமுதி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மேலும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பள்ளிகளுக்கு அருகே செயல்படும் பெட்டிக் கடைகளில் விற்கப்படும் தின்பண்டங்கள், உணவுப் பொருள்களின் தரத்தை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.