ராமநாதபுரத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் மறியல்: 320 போ் கைது
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ ஜாக்) அமைப்பு சாா்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட முயன்ற 320 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
முன்னதாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, டிட்டோ ஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் இரா. சிவபாலன் தலைமை வகித்தாா். மு. ராஜேந்திரன், மு. முனியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில நிா்வாகி ஆரோக்கியதாஸ் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
அப்போது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை நீக்கி மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். பிறகு மறியலில் ஈடுபட முயன்ற 320 பேரை போலீஸாா் கைது செய்தனா்.