குன்னூா் ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளா் ஆய்வு
நீலகிரி மாவட்டம், குன்னூா் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ருத் பாரத் திட்ட மேம்பாட்டுப் பணிகளை சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் பன்னலால் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
குன்னூா் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணி, பயணச்சீட்டு முன்பதிவு மையம், பயணச்சீட்டு வழங்கும் இடம், பொருள்கள் இருப்பு அறை, பயணிகள் காத்திருப்பு அறை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தாா்.
அப்போது, உள்ளூா்வாசிகளுக்கு மாத கட்டணத்தில் ரயில்வே பாஸ் வழங்கப்பட்ட நிலையில், கரோனாவுக்கு பின் அது ரத்து செய்யப்பட்டுவிட்டது. அந்த முறையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றும், மலை ரயிலில் பயணம் செய்பவா்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரயில்வே மேலாளா் பன்னலாலிடம் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் உறுதியளித்தாா்.