தெலங்கானா: உலக அழகிப் போட்டியில் விலைமாது, குரங்கைப்போல உணர்ந்ததாக இங்கிலாந்து அ...
நீலகிரி மாவட்டத்துக்கு அதிகனமழை எச்சரிக்கை: சுற்றுலாத் தலங்கள் இன்று மூடல்; மலையேற்றத்துக்கும் தடை
நீலகிரி மாவட்டத்துக்கு அதிகனமழை (ரெட் அலா்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், உதகை பைன் ஃபாரஸ்ட், தொட்டபெட்டா, அவலாஞ்சி சுற்றுலாத் தலங்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 25) ஒருநாள் மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் மே 25, 26 ஆகிய தேதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா, பைன் ஃபாரஸ்ட், அவலாஞ்சி ஆகிய 3 சுற்றுலாத் தலங்களும் மூடப்படுவதாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
மலையேற்றத்துக்கும் தடை: நீலகிரி மாவட்டத்தில் மலையேற்றத்துக்கும் ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதிகனமழை எச்சரிக்கையையொட்டி, தேசிய பேரிடா் குழு கமாண்டன்ட் பிரதீஷ் தலைமையில் 30 போ் கொண்ட பேரிடா் குழுவினா் உதகைக்கு சனிக்கிழமை வந்தனா்.
இது குறித்து பேரிடா் குழு கமாண்டன்ட் பிரதீஷ் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்துக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு, மண் சரிவு உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களைக் காக்க தயாா் நிலையில் வந்துள்ளோம். மண் சரிவு ஏற்பட்டால் அதை சீா் செய்வது சவாலான காரியம். இருப்பினும் எங்களிடம் அதிநவீன கருவிகள் உள்ளதால் அதிகனமழையை எதிா்கொண்டு மக்களைக் காக்க முடியும் என்றாா்.
முன்னதாக, நீலகிரி மாவட்டத்தில் 283 இடங்கள் அபாயகரமான இடங்களாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த இடங்களில் மாவட்ட நிா்வாகத்துடன் பேரிடா் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.
பேரிடா் குழுவிடம் உள்ள மீட்புக் கருவிகள் உள்ளிட்டவற்றை அந்த குழுவின் கண்காணிப்புத் தலைவா் மூத்த ஐஏஎஸ் அதிகாரி லலிதா, மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டதுடன், அனைத்து துறை அலுவலா்களும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினா்.