நாடு முழுவதும் பொது சிவில் சட்ட அமலுக்கு வாய்ப்பில்லை: கா்நாடக துணை முதல்வா்
குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட அரசியலமைப்பு! மணிப்பூர் எம்பி
அரசியலமைப்பு குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுள்ளதாக மணிப்பூர் காங்கிரஸ் எம்.பி. அங்கோம்சா அகோய்ஜாம் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் கல்விச் சிந்தனை அரங்கு 2025 திங்கள்கிழமை காலை தொடங்கியது.
இந்த நிகழ்வில் ’முதல்முறை தேர்வான எம்.பி.க்களின் குரல்’ என்ற தலைப்பில் பாஜகவின் ரவீந்திர நாராயண் பெஹெரா, காங்கிரஸின் பிமோல் அங்கோம்சா அகோய்ஜாம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் ஜான் பிரிட்டாஸ் கலந்து கொண்டு விவாதித்தனர்.
இதையும் படிக்க : ஹிந்தி கற்க கட்டாயப்படுத்த முடியாது, ஆனால்...: ஆர்எஸ்எஸ் இணைச் செயலர்
ஜான் பிரிட்டாஸ் பேசியதாவது:
“நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளின் பலம் குறைந்துவிட்டதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இடதுசாரிகளின் பார்வை நாட்டுக்குத் தேவையானதாகவே உள்ளது. பாஜகவுக்கும் ஒரு சமயத்தில் 2 எம்பிக்கள் மட்டுமே நாடாளுமன்றத்தில் இருந்துள்ளனர்.
கேரளத்தில் நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொள்ள பிரதமருக்கு நேரம் கிடைக்கிறது, ஆனால் மணிப்பூர் செல்ல நேரம் கிடைக்கவில்லை. மீடியா தற்போது மோடியாவாக மாறியுள்ளது” என்றார்.
அங்கோம்சா அகோய்ஜாம் பேசியதாவது:
“அரசியலமைப்பு குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுள்ளது. மணிப்பூர் பிரச்சினை கவனிக்கப்படாமல் உள்ளது. விதிமுறைகளை மீறி சில தேசிய ஊடகங்கள் மணிப்பூர் விவகாரத்தை வெளியிட்டன.
மணிப்பூரின் சில பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக மாநில முதல்வர் கூறுவது நினைத்து பார்க்க முடியாத ஒன்று. கலவரம் மற்றும் ஆக்கிரமிப்புகளில் இருந்து மாநிலத்தை மத்திய அரசு பாதுகாக்கும் பிரிவு 355, அமலில் உள்ளதா? இல்லையா? என்பது யாருக்கும் தெரியாது” என்றார்.
ரவீந்திர நாராயண் பெஹெரா பேசியதாவது:
“நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நோக்கம் இடையூறு செய்வது மட்டுமே. மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் பேசும்போது கூட, அவையின் மையப் பகுதிக்கு வந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
எங்களைவிட எதிர்க்கட்சியினருக்கே பேசுவதற்கு அதிக வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது. நாடாளுமன்ற மைக்ரோபோன்கள் தானியங்கி அமைப்பு, யாருடைய மைக்கையும் யாரும் அணைக்க இயலாது” என்றார்.