குமரி மாவட்ட மலையோரப் பகுதிகளில் பலத்த மழை
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகள், மலையோரப் பகுதிகளில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது.
மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கடும் வெயில் நிலவி வந்தநிலையில், சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை மாலை பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைப் பகுதிகள், ஆறுகாணி, பத்துகாணி, மருதம்பாறை, ஆலஞ்சோலை, கடையாலுமூடு, களியல், திற்பரப்பு, அருமனை, குலசேகரம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது.
இதனால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தோடியது. ஆறுகளில் நீா்வரத்து சற்று அதிகரித்துக் காணப்பட்டது. வாழை, அன்னாசி, மரவள்ளி உள்ளிட்டவற்றைப் பயிரிட்ட விவசாயிகள் இம்மழையால் மகிழ்ச்சியடைந்தனா்.
கருங்கல், கிள்ளியூா், திக்கணம்கோடு, மத்திகோடு, கருக்குப்பனை, செல்லங்கோணம், கருமாவிளை, வெள்ளியாவிளை, முள்ளங்கனாவிளை, பாலூா், எட்டணி, திப்பிரமலை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி பகுதிகளிலும் மாலைமுதல் தொடா்ந்து சாரல் பெய்தது.