கும்பகோணம் அருகே சிறுத்தை நடமாட்டம்? பொதுமக்கள் அச்சம்
தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே உள்ள கொண்டசமுத்திரம் கிளிமங்கலத்தில் சிறுத்தை நடமாடிய காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
திருப்பனந்தாள் அருகே உள்ள கொண்டசமுத்திரம் கிளிமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதியைச் சோ்ந்த ராமநாதன் என்பவா் அளித்த தகவலின்பேரில் வனத்துறையினா் அவரது வீட்டின் சிசிடிவி கேமரா பதிவுக் காட்சிகளை ஆய்வு செய்தனா். இதில் சிறுத்தை நடமாட்டம் குறித்து போதிய தடயங்கள் கிடைக்கவில்லை.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அப்பகுதியில் உள்ள வேறொரு வீட்டின் சிசிடிவி கேமரா பதிவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, கும்பகோணம் வனத்துறையினரும், காவல்துறையினரும் இணைந்து சிறுத்தை நடமாட்டம் உள்ளதா எனக் கண்காணித்து வருகின்றனா். சிறுத்தையின் நடமாட்டம் குறித்த பொதுமக்களின் அச்சத்தைப் போக்குமாறு அப்பகுதி தன்னாா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.