கும்பகோணம் குளத்தில் மிதந்த பூ வியாபாரி சடலம் மீட்பு: கொலையா? போலீஸாா் விசாரணை
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் சேய் குளத்தில் சனிக்கிழமை கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் மிதந்த பூ வியாபாரியின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
கும்பகோணம் சேய்குளத்தில் சனிக்கிழமை ஆண் சடலம் மிதப்பதாக மேற்கு காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆய்வாளா் பா.ரமேஷ் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.
சடலத்தின் கைகள், கால்கள் துணியால் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. இறந்து கிடந்தவா் யாா் என போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில், அந்த குளத்தின் எதிரே உள்ள செக்காங்கண்ணி பகுதியைச் சோ்ந்த பூ வியாபாரி ஜெயராமன்(62) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து ஜெயராமன் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனா்.