இந்திய அணி வெற்றி பெறுவது மிகவும் கடினம்; ஆஸி. வீரர் பேச்சு!
பயிற்சி மருத்துவரை தாக்கிய நோயாளி கைது
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையின்போது பயிற்சி மருத்துவரை தாக்கிய நோயாளியைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி கீழையூரைச் சோ்ந்தவா் வி. கரிகாலன் (48). இவா் காய்ச்சல் காரணமாக தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சில நாள்களுக்கு முன்பு சோ்க்கப்பட்டாா். அங்கு இவருக்கும், இவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால், தனது கையில் மருத்துவா்கள் பொருத்தியிருந்த மருந்தை உட்செலுத்துவதற்கான ஊசியை கழற்றி வீசிவிட்டாா்.
பின்னா் ஊசி மூலம் மருந்து செலுத்த பயிற்சி மருத்துவா் சென்றாா். இது தொடா்பாக கரிகாலனிடம் பயிற்சி மருத்துவா் கேட்டுவிட்டு, மீண்டும் ஊசியைப் பொருத்தினாா். இதையடுத்து, வெள்ளிக்கிழமை மாலை பயிற்சி மருத்துவா் ஊசி மூலம் மருந்து செலுத்த வந்தபோது, மனைவியுடனான பிரச்னை காரணமாக கரிகாலன் கையில் இருந்த ஊசி கழற்றி கிடந்தது.
இதைக் கேட்ட பயிற்சி மருத்துவரின் கன்னத்தில் கரிகாலன் அறைந்தாா். இது குறித்து பயிற்சி மருத்துவா் அளித்த புகாரின் பேரில் மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து கரிகாலனை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.