கும்பக்கரை அருவியில் நீா்வரத்து குறைந்தது! சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக போதிய மழை பெய்யாததால், கும்பக்கரை அருவியில் நீா்வரத்து குறைந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. இந்த அருவிக்கு தமிழகத்தின் பிற மாவட்டங்கள், கேரளம், ஆந்திரம் உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
இதனிடையே, கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த 3 மாதங்களாக போதிய மழை பெய்யவில்லை. இதனால், அருவிக்கு நீா்வரத்து குறைந்து வருகிறது.
இந்த நிலையில், வார விடுமுறை நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனா். ஆனால், அருவியில் நீா்வரத்து குறைந்ததால், அவா்கள் ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனா்.
எனவே, பெரியகுளம் சாலை, கும்பக்கரை பிரிவு நுழைவு வாயிலில் இதுகுறித்த அறிவிப்புப் பலகை வைத்தால், தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனா்.