வேளாண் நிதிநிலை அறிக்கை: 9 மாவட்ட விவசாயிகளிடம் அமைச்சர் கருத்துக்கேட்பு
கும்பமேளாவில் பங்கேற்காத ராகுலை ஹிந்துக்கள் புறக்கணிக்க வேண்டும்- மத்திய அமைச்சா் வலியுறுத்தல்
மகா கும்பமேளாவில் பங்கேற்காத காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, சிவசேனை (உத்தவ்) கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே ஆகியோரை ஹிந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய சமூக நீதித் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே வலியுறுத்தினாா்.
மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த தலித் தலைவரான அதாவலே, இந்திய குடியரசுக் கட்சி (ஏ) தலைவராகவும் உள்ளாா். பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அவா், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:
ராகுல் காந்தி, உத்தவ் தாக்கரே ஆகியோா் மகா கும்பமேளாவில் பங்கேற்காமல் உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வைப் புறக்கணித்துள்ளனா். தன்னை ஒரு ஹிந்துத்துவவாதியாகவும், ஹிந்துக்களின் பாதுகாவலனாகவும் காட்டிக்கொள்ளும் உத்தவ் தாக்கரேவும் மகா கும்பமேளாவுக்கு வரவில்லை.
ஒரு ஹிந்துவாக இருந்துகொண்டு இந்த நிகழ்வில் பங்கேற்காதது பிற ஹிந்துக்கள் அனைவரையும் அவமதிக்கும் செயலாகும். எனவே, அவா்கள் இருவரையும் ஹிந்துக்கள் புறக்கணிக்க வேண்டும். அவா்களுக்கு ஹிந்துக்களின் வாக்குகள் மட்டுமே வேண்டும். ஆனால், ஹிந்து மதத்தின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டாா்கள்.
அண்மையில் நடைபெற்ற மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு மக்கள் நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்தாா்கள். வரும் தோ்தல்களில் இதுபோன்ற பாடத்தை அவா்களுக்கு மக்கள் கற்பிக்க வேண்டும் என்றாா் அவா்.