குருப்பெயர்ச்சி 2025: பொதுப் பலன்கள்!
2025-ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின் படி மே 11ஆம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின் மே 14ஆம் தேதியும் நிகழ்கிறது.
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ விஸ்வாவசு வருஷம் உத்தராயனம் வஸந்த ரிது சித்திரை மாதம் 28ம் தேதி - 11.05.2025 அன்றைய தினம் சுக்ல சதுர்த்தசியும் ஞாயிற்றுக்கிழமையும் ஸ்வாதி நக்ஷத்ரமும் வியதீபாத நாமயோகமும் வணிஜை கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 18:29க்கு பகல் மணி 01.19க்கு சிம்ம லக்னத்தில் ஸ்ரீகுரு பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பிரவேசிக்கிறார்.
பொதுப் பலன்கள்
மிதுனத்தில் வீற்றிருக்க வரும் குருவால் பொருளாதார நிலைமை சீரடையும். அதிகளவில் இருந்த விரையங்கள் குறையும். தனிநபர், அரசாங்கத்தின் பொருளாதார நிலைமை கொஞ்ச கொஞ்சமாக உயரும். விரலுக்கேற்ற வீக்கம் என்பது போல அவரவர் தகுதிக்கேற்ற மாதிரி கடன் உருவாகும். இடி மின்னல் அதிகம். சூறாவளிக் காற்றுடன் அதிக மழை ஏற்படும். இயற்கையின் சீற்றத்தால் சேதங்கள் அதிகரிக்கும். தனியார் உடைமைகளுக்கும் சேதம் ஏற்படலாம். அதற்கு நிதியுதவி செய்யும் வகையில் பெருமளவில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் செலவுகள் ஏற்படலாம். உலக வங்கி மற்றும் வெளிநாடுகள் மூலம் மத்திய அரசு அதிகளவில் கடன்கள் வாங்குவது அதிகரிக்கும். புராதன ஆலயங்களுக்கு அரசாங்கம் கும்பாபிஷேகம் செய்து வைத்தலும் நடைபெறும்.
மடாதிபதிகள் மற்றும் சந்நியாசிகளுக்கு புதிய விதிமுறைகளை அரசு உருவாக்கும். பல முக்கிய வழக்குகளுக்கு எதிர்பார்த்த தீர்ப்பு நல்ல முறையில் வரும். விமான போக்குவரத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். பூச்சி மற்றும் கொசுக்கள் பிரச்னைகள் தீரும். பசுபிக்கடலில் சத்தமும் நிலநடுக்கமும் உண்டாகும். ராக்ஷஸ அலைகள் உண்டாகும். மாலத்தீவு கடுமையாகப் பாதிக்கப்படும். இந்தோனேசியா, ஜப்பான், இலங்கை, அந்தமான், ஒடிசா, ஆந்திரம் போன்ற மாநிலங்களில் கடுமையான புயல் பாதிப்புகள் உண்டாகும். ராணுவம் தங்களது வியூகங்களை அடிக்கடி மாற்றும். அந்நிய தேசத்திலிருந்து நமது நாட்டிற்கு மறைமுக இன்னல்கள் வரும். குண்டுவெடிப்பு, அக்னி அபாயங்கள் ஏற்படலாம்.
இந்தியாவில் ஜாதி, மதம் வெறிச் சண்டைகள், கலகங்கள் ஏற்படலாம். தீவிரவாதங்களை ஒடுக்க, கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு புதிய சட்ட திட்டங்களை உருவாக்கும். அரசுகளுக்குள் குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். தமிழகம் எதிர்பார்த்தபடி மழை பொழியும். முக்கியமான வனப்பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்பட்டு மறையும். பசுமையான வனப்பகுதிகளாக மாறும். ஆலய நிர்வாகம் வருமானப் பெருக்கத்திற்கான வழிமுறைகளைக் கொண்டு வரலாம். தியானம், யோகா, வேள்விகளுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும். உணவு தானியங்கள், காய், கனிகளின் விலை உயர்வு கட்டுக்குள் இருக்கும். மண்ணென்ணைய், டீசல், பெட்ரோல், கேஸ், எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்ந்தாலும் தட்டுப்பாடு ஏற்படும்.
மக்களுக்கு இதற்கான தேவை அதிகரிக்கும். தங்கம் வெள்ளி விலை ஏற்றமடையும். விவசாயம் செழிக்கும். மகசூல் அதிகரிக்கும். விவசாயிகளின் வாழ்வில் பிரகாசம் ஏற்படும். அரசியலில் உள்ளவர்களுக்கு இவ்வாண்டு சத்திய சோதனையாக அமையும். தொழிலதிபர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே நல்லுறவும், சலுகைத் திட்டத்தால் பயன்களும் அடைவார்கள். கலைத்துறையினருக்குப் புதுவருடம் சம்பாத்தியம், புகழ், பெருமை ஏற்படும். புதுமுகங்களின் வரவு அதிகமாகும். கலைத்துறையினர் சிலருக்கு அரசியலில் வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும். சாதனைகள் புரியவும் செய்வார்கள்.
நமது நாட்டிலிருந்து வெளிநாட்டிற்குச் சென்று அந்நிய செலாவணி அதிகமாகும். பொன் பொருள் பித்தளை போன்ற உலோகங்கள் விலை கடுமையாக உயரும். நாட்டின் பாதுகாப்பு உயர்த்த வேண்டி வரும். பாலைவனத்தில் உஷ்ணம் அதிகரிக்கும். கடல் அவ்வப்போது உள்வாங்குவதும் நீண்ட காலம் நிசப்தமாகவும் இருக்கும். பேப்பர், விவசாயம் சம்பந்தப்பட்ட பொருட்கள் பற்றாக்குறையாக இருக்கும். அயல்நாட்டு வியாபாரம் செழிக்கும். தென் மாநிலங்களில் அவ்வப்போது கலவரங்கள் வந்து செல்வதும், அதனை அரசு அடக்குதலும் நடக்கும். ஏரி குளம் அணைகள் போன்றவை நிரம்பி வழியும். கடுமையான உஷ்ணத்தால் மக்கள் பாதிக்கப்படுவர். புண்ணிய க்ஷேத்திரங்களில் கர்ம காரியங்கள் தொய்வின்றி நடைபெறும். வாசனைத் திரவியங்கள் அதிகளவில் விற்பனையாகும். அறிவியல் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள் மைல்கல்லை எட்டும். புதிது புதிதாக மக்களுக்குப் பயன்படும் பொருள்களை வியாபாரிகள் அறிமுகம் செய்வார்கள். வீண் வதந்தி செய்வோர், மக்களுக்குக் குந்தகம் விளைவிப்போர் மோசமாகப் பாதிக்கப்படுவார்கள்.