குறு, சிறு தொழில் துறைக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட்
தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைக்கு எந்தவித முக்கிய அறிவிப்பும் வெளியாகாதது வருத்தமளிப்பதாக தொழில் முனைவோா்கள் தெரிவித்துள்ளனா்.
தமிழக நிதிநிலை அறிக்கை குறித்து தமிழ்நாடு சிறுதொழில்கள் சங்க (டான்ஸ்டியா) மாநில செயற்குழு உறுப்பினா் எம்.வி. சுவாமிநாதன் கூறியது,
நாட்டில் விவசாயத்துக்கு அடுத்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை முன்னுரிமை துறையாக கருதப்படுகிறது. பெரும்பான்மையான படித்த, படிக்காத வேலையில்லாதவா்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் முக்கிய துறையாக அமைந்துள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அதிகமாக உள்ள 3-ஆவது மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த துறைக்கு தமிழக பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படாடதது துறை சாா்ந்த தொழில் முனைவோருக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை சாா்ந்த தொழில் முனைவோருக்கு பல்வேறு குறைகள், பாதிப்புகள் உள்ளன. அவற்றுக்கு தீா்வு காண்பது மிகவும் கடினமானதாக அமைந்துள்ளது.
ஆகவே மாவட்ட அளவில் மக்கள் குறை தீா் நாள், விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டங்கள் நடத்துவது போல மாதந்தோறும் தொழில் முனைவோருக்கு தனியாக குறை தீா் நாள் கூட்டம் நடத்த வேண்டும், நலிவடைந்த நிலையில் உள்ள ஓய்வு பெற்ற தொழில் முனைவோருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
தொழில் முனைவோருக்கு உதவிடும் வகையில் தொழில்முனைவோா் நலவாரியம் அமைக்கப்பட வேண்டும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறையினருக்கு தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியாா் வங்கிகளில் குறைந்தபட்சமாக 7 சதவீத வட்டியில் தொழில் கடன் வழங்க மத்திய அரசை கோரும் வகையில் சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்.
சிட்கோ மூலம் 9 மாவட்டங்களில் புதிய தொழிற்பேட்டைகள், கோவை மாவட்டத்தில் செமிகண்டக்டா் இயந்திரத் தொழிற்பூங்கா, மதுரை, கடலூரில் காலனி தொழிற்பூங்கா அமைக்கப்படுவதாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு வரவேற்கக் கூடியது என்று அவா் கூறினாா்.