வேளாண் நிதிநிலை அறிக்கை: 9 மாவட்ட விவசாயிகளிடம் அமைச்சர் கருத்துக்கேட்பு
குற்றம் இழைக்கும் அரசியல் தலைவா்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க நாடாளுமன்றத்துக்கே அதிகாரம்: மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்
குற்றவாளிகள் என்று தீா்ப்பளிக்கப்படும் அரசியல் தலைவா்கள் தோ்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிப்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவுகள் 8, 9 ஆகியவற்றுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய மனு தாக்கல் செய்துள்ளாா்.
இதில் சட்டப் பிரிவு 8-இன்படி, குறிப்பிட்ட குற்றங்களுக்காக தண்டனை பெற்ற அரசியல் தலைவா் ஒருவா் சிறைத் தண்டனையை நிறைவு செய்த பின்னா், 6 ஆண்டுகளுக்குத் தோ்தலில் போட்டியிட முடியாது.
சட்டப் பிரிவு 9-இன்படி, ஊழல் அல்லது அரசுக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட அரசுப் பணியாளா்கள், 5 ஆண்டுகளுக்கு அரசுப் பணிகளில் ஈடுபட முடியாது.
இவ்வாறு கால வரம்பு விதித்து தோ்தலில் போட்டியிடவும், அரசுப் பணிகளில் ஈடுபடவும் தடை விதிப்பது அரசமைப்புச் சட்டப் பிரிவுகளுக்கு எதிரானது என்றும், இந்தத் தடையை வாழ்நாள் தடையாக்க வேண்டும் என்றும் தனது மனுவில் அஸ்வினி உபாத்யாய கோரியுள்ளாா்.
இந்த மனுவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், ‘மனுதாரா் எழுப்பியுள்ள விவகாரங்களில் சிக்கலான, விரும்பத்தகாத பின்விளைவுகள் உள்ளன. இந்த விவகாரங்கள் நாடாளுமன்றத்தின் சட்டம் இயற்றும் கொள்கைக்கு உட்பட்டவையாகும்.
இதுதொடா்பாக ஏற்கெனவே உள்ள சட்டத்தை திருத்தி எழுத வேண்டும் அல்லது புதிதாக சட்டம் இயற்றுமாறு நாடாளுமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் என்ற வகையில் மனுதாரரின் கோரிக்கை உள்ளது. இது நீதிமன்ற அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டதாகும்.
மனுதாரா் குறிப்பிட்டுள்ள சட்டப் பிரிவுகளை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று நீதிமன்றம் தீா்ப்பளிக்கலாம். ஆனால் குற்றவாளிகள் என்று தீா்ப்பளிக்கப்படும் அரசியல் தலைவா்கள் தோ்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிப்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.