`ஒரு குவிண்டால் வெங்காயத்திற்கு ரூ.350 மானியம்!'- மகாராஷ்டிரா அரசு முடிவு!
குளச்சல்: சிறுமியை மிரட்டி கர்ப்பமாக்கிய உறவினர்; குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு சின்னக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தேசலிங்கம்(42). இவர் கடந்த 6 மாதங்களாக கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை அடுத்த ரீத்தாபுரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனது மனைவியுடன் வசித்து வந்தார். இவரது உறவினர் மண்டைக்காடு பகுதியில் வசித்து வருகின்றனர்.
தேசலிங்கமும், அவரது மனைவியும் அடிக்கடி மண்டைக்காட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வருவது வழக்கம். உறவினர் வீட்டில் 12-ம் வகுப்பு படித்து முடித்த சிறுமி ஒருவர் உள்ளார். அந்த சிறுமிக்கு சில நாள்களாக வயிற்றுவலி இருந்துவந்துள்ளது. இதையடுத்து சிறுமியை அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தபோது சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தாயார் சிறுமியிடம் இதுகுறித்து விசாரித்துள்ளார். அப்போது உறவினர் தேசலிங்கம் தன்னை மிரட்டி சிறார்வதை செய்ததாக கூறியுள்ளார். இதையடுத்து சிறுமி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இது குறித்து சிறுமியின் தாய் குளச்சல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். தேசலிங்கம் மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், தலைமறைவாக இருந்த தேசலிங்கத்தை கைது செய்தனர். பின்னர், அவரை நாகர்கோவில் போக்சோ கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தேசலிங்கம் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.

இதுபற்றி போலீஸார் கூறுகையில், "கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசலிங்கம் மண்டைக்காட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது உறவினரின் 17 வயது மகள் வீட்டில் தனியாக இருந்துள்ளார். தனது உறவினர் மகள் என்று கூட பார்க்காமல் அந்த சிறுமியை வீட்டுக்குள்ளேயே வைத்து மிரட்டி சிறார்வதை செய்திருக்கிறார். அவர்மீது போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு செய்ததுடன், குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்" என்றனர்.