``குளிர்பானம் விஷம் என்றால் தயாரிப்பை தடை செய்யுங்கள்; என் வருமானத்தை தடுக்காதீர்கள்" - ஷாருக்கான்
`குளிர்பானங்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்' என்று கூறப்பட்டாலும், அதை குடிப்பதை யாரும் நிறுத்துவதில்லை. அதேசமயம், அந்த குளிர்பான விளம்பரத்தில் நடிகர்கள் நடித்தால் அதற்கு விமர்சனங்கள் வருகிறது என்று இந்த விமர்சனங்களுக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் காட்டமாக பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பதிலில்,''குளிர்பானம் குழந்தைகளுக்கு மோசமானது என்றால் அதனை தடை செய்துவிடுங்கள். புகைப்பிடிப்பது மோசமானது என்று நினைத்தால் இந்தியாவில் சிகரெட் தயாரிப்பதை நிறுத்திவிடுங்கள். குளிர்பானம் மோசமானது என்று நீங்கள் நினைத்தால் அதனை விற்பனை செய்யவிடாதீர்கள். அவை நமது மக்களுக்கு விஷம் என்றால் அதனை இந்தியாவில் தயாரிக்கவிடாதீர்கள். உங்களுக்கு வருவாய் கொடுக்கிறது என்பதற்காக நீங்கள் அதனை நிறுத்தமாட்டீர்கள்.
சில பொருள்கள் மோசமானது என்று நினைத்தாலும் அதனை நீங்கள் அதனை நிறுத்தமாட்டீர்கள். அவை அரசாங்கத்திற்கு வருவாயை கொடுக்கின்றன. ஆனால், எனது வருமானத்தை நிறுத்தாதீர்கள். நான் நடிகர், வேலை செய்வதற்கு எனக்கு வருமானம் கிடைக்கிறது. உங்களுக்கு எதாவது தவறு என்று நினைத்தால் நீங்கள் தடை செய்துவிடுங்கள். அதில் எந்த வித பிரச்னையும் இல்லை. புகைப்பிடிப்பதால் மிகப்பெரிய சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே, மக்கள் அதில் கவனம் செலுத்தவேண்டும். இன்றைக்கு ஒட்டுமொத்தமாக புகைப்பிடிப்பது பெரிய பிரச்னையாக இருக்கிறது. சினிமா துறையை விட்டுவிடுங்கள்.
இந்தியர்கள் நன்றாக படித்தவர்கள். சினிமாவில் நடிகர்கள் புகைப்பிடிப்பதை பார்த்து புகைப்பிடிக்கக்கூடாது என்பது மக்களுக்குத் தெரியும். படங்களில் புகைப்பிடிக்கும் பிரச்னையை விட மிகப்பெரிதாக இருக்கும் சுகாதாரப்பிரச்னையை கவனிக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
தனியார் டிவியில் கரண் தாப்பர் என்ற நிகழ்ச்சி தொகுப்பாளருடன் ஷாருக்கான் பேசிய போது இக்கருத்தை வெளியிட்டுள்ளார். நடிகர்கள் சிகரெட், குட்கா, குளிர்பானம் போன்ற விளம்பரங்களில் நடிக்ககூடாது என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் குட்கா விளம்பரங்களில் நடிப்பதை சில நடிகர்கள் கைவிட்டுள்ளனர்.