20 நிமிடத்தில் 2 பாட்டில் விஸ்கியை குடித்த சோசியல் மீடியா இன்ஃப்ளுயன்சர் மரணம்..
தாய்லாந்து கிழக்கு பகுதியில் வசிக்கும் சோசியல் மீடியா இன்ஃப்ளுயன்சர் தனகரன் காந்தே (21) ஒரு விபரீத போட்டியில் கலந்து கொண்டு, மரணம் அடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனகரன் காந்தே பணத்திற்காக எந்தவித சவாலையும் ஏற்று செய்யக்கூடியவர். இதற்கு முன்பு சானிட்டைசரை குடித்தது போன்ற பல சவால்களில் கலந்து கொண்டு பணம் வாங்கி இருக்கிறார். ஏற்கெனவே நன்றாக மது அருந்தக்கூடியவரான காந்தே நேற்று இரவு பார்ட்டி ஒன்றுக்கு சென்றார்.
அங்கு மூன்று பாட்டில் விஸ்கியை குறிப்பிட்ட நேரத்திற்குள் குடித்தால் 30 ஆயிரம் தாய்லாந்து பணம் கொடுப்பதாக அறிவித்தனர். அந்த போட்டியை காந்தே ஏற்றுக்கொண்டார். அவர் முன்பு விஸ்கி பாட்டில்கள் கொண்டு வந்து அடுக்கப்பட்டது. ஏற்கெனவே காந்தே வேறு இடத்தில் மது அருந்திவிட்டு வந்திருந்தார். அப்படி இருந்தும் பணத்திற்கு ஆசைப்பட்டு போட்டியை ஏற்றுக்கொண்டார்.
அவர் 10 நிமிடத்திற்குள் முதல் பாட்டில் விஸ்கியை குடித்து முடித்தார். அவரை சுற்றி பலரும் நின்று அவர் குடிப்பதை பார்த்து உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தனர். ஒரு பாட்டில் முடிந்தவுடன் அடுத்த பாட்டில் திறக்கப்பட்டது. அதனையும் மடமடவென குடிக்க ஆரம்பித்தார். இரண்டாவது பாட்டிலை காலி செய்தவுடன் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவரை அங்கு இருந்தவர்கள் உடனே மருத்துவமனைக்கு தூக்கிச்சென்று சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனலிக்காமல் அவர் இறந்து போனார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தாய்லாந்து போலீஸார் சவாலுக்கு ஏற்பாடு செய்த நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், விசாரணை செய்து வருகின்றனர்.