அண்ணா பல்கலை. விவகாரம்: சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணை!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் இன்று(ஜன. 2) நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் கடந்த டிச. 23-ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் ஞானசேகரன் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த விவகாரத்தை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் ஓர் உத்தரவைப் பிறப்பித்திருந்தது. அதில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்கவும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் கோட்டூர்புரம் போலீஸார் வழக்கு ஆவணங்களை ஒப்படைத்த நிலையில், 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான விசாரணைக் குழு, இன்று சம்பவம் நடந்த அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் விசாரணை நடத்தினர்.
இதையும் படிக்க: ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 1,400 புள்ளிகள் உயர்வு!
சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் சிநேக பிரியா, ஆவடி துணை ஆணையர் அய்மான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த வாரம் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தச் சென்றபோது சிறப்புப் புலனாய்வுக் குழுவும் உடன் சென்றதாக கூறப்படும் நிலையில், குற்றம் நிகழ்ந்த இடத்திற்கு இன்று காலை 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகளும் தங்களது குழுவினருடன் சென்று விசாரணை மேற்கொண்டனர்.