``சிகப்பு சிந்தனையும், அதற்குப் பின்னால் இருக்கும் தியாக வாழ்க்கையும்..." - நடிகர் விஜய் சேதுபதி
'மாமனிதருக்கு மக்கள் விழா' எனும் தலைப்பில் தோழர் இரா.நல்லகண்ணு நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் சேதுபதி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``இந்த விழாவில் கலந்துக்கொள்வதற்கு பெருமைப்படுகிறேன். விடுதலை 2 - வில் நடிக்கும்போது, அதில் நான் பேசிய வசனங்களின் மூலம், தோழர்களின் வாழ்க்கையை நான் தெரிந்துகொள்வதற்கும், புரிந்துகொள்வதற்கும் பெரிதும் உதவியது. அந்தப் படத்தில் மஞ்சுவாரியார் ஒரு வசனம் பேசுவார்.
இன்னைக்கு பலர் தோளில் துண்டு போடுறதும், காலில் செருப்பு போடுறதும், தீபாவளி, பொங்கல் போனஸ் வாங்குறதும், 8 மணி நேரம் மட்டுமே வேலை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை போன்றவைகள், நல்லகண்ணு மாதிரியானப் பலத் தோழர்கள் பெற்றுத் தந்தது. அதிகாரத்தால் கொடுமைப் படுத்தப்பட்டும் அவர்கள் போராடி, ரத்தம் சிந்தி, வாங்கிக் கொடுத்தது என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும். இவற்றைத் தெரிந்துக்கொள்ளாதவர்களில் நானும் ஒருவனாகதான் இருந்தேன். ஆனால், அதில் பலனடைந்த பலகோடி பேரில் நானும் ஒருவன். நல்லகண்ணு அவர்களின் வாழ்க்கை வரலாறு பாடபுத்தகத்தில் இருக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை நானும் தமிழ்நாட்டு அரசிடம் கேட்டுக்கொள்கிறேன். அதன் வழியாக இந்த சிகப்பு சிந்தனையும், அதற்குப் பின்னால் இருக்கும் தியாக வாழ்க்கையும் பலருக்கும் சென்றடைய வேண்டும்." எனப் பேசினார்.