சல்மான் கான் பிறந்தநாளில் ரூ.6.35 லட்சத்துக்கு ஆடைகள் வாங்கி தானம் வழங்கிய ரசிகர்!
பாலிவுட் நடிகர் சல்மான் கான் சமீபத்தில் தனது 59-வது பிறந்தநாளை குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ஆனந்த் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடினார். சல்மான் கான் பீயிங் ஹூமன் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இத்தொண்டு நிறுவனத்தின் மூலம் குழந்தைகளின் இருதய ஆபரேசனுக்கு தேவையான நிதியுதவி செய்து வருகிறார். இது தவிர கல்வி உதவியும் வழங்கி வருகிறார். சல்மான் கான் கோபக்காரர் என்று அறியப்பட்டாலும், அவர் சேவை விவசயத்தில் மிகவும் தாராள மனப்பான்மை கொண்டவர்.
நிதி பிரச்னையால் சேவை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பீயிங் ஹூமன் என்ற பிராண்டில் ஆடைகளை விற்பனை செய்து வருகிறார். அந்த பிராண்டை பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று ஆடைகளை தயாரித்து விற்பனை செய்து கொள்ள அனுமதி கொடுத்துள்ளார். அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை பயன்படுத்தி சேவை செய்து வருகிறார்.
சல்மான் கானின் சேவைக்கு உதவும் விதமாக ராஜஸ்தானை சேர்ந்த குல்தீப் சிங் என்ற ரசிகர் பீயிங் ஹூமன் பிராண்ட் ஆடைகளை வாங்கி தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக கொடுத்துள்ளார்.
சல்மான் கானின் பிறந்தநாளில் குல்தீப் சிங் ரூ.6.35 லட்சம் மதிப்புள்ள பீயிங் ஹூமன் பிராண்ட் ஆடைகளை விலைக்கு வாங்கி அதனை தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்கினார். பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அந்த ஆடைகளை வாங்கிச் சென்றனர்.
குல்தீப் சிங் இது தொடர்பாக அளித்த பேட்டியில், ''சல்மான் கான் பிறந்த நாளில் ரூ.6.35 லட்சம் மதிப்புள்ள ஆடைகளை வாங்கி தேவைப்படுவோருக்கு வழங்கி எங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டோம். இன்னும் சில ஆடைகள் இருக்கிறது. அதனை தேவைப்படுவோருக்கு கொடுப்போம். சுகாதாரம், கல்வியில் பீயிங் ஹூமன் சிறந்த முறையில் சேவை செய்து வருகிறது. அதற்கு நாம் உதவவேண்டும். நாங்கள் பீயிங் ஹூமன் பிராண்ட் ஆடைகளை கடையில் இருந்து வாங்கினோம். இது அத்தொண்டு நிறுவனத்தின் செயல்களுக்கு உதவியாக இருக்கும் என்பதால் அதனை வாங்கினோம்''என்றார்.