குருவாயூா்-மதுரை பயணிகள் ரயிலில் இணைப்பு துண்டிப்பு: 20 நிமிடங்கள் தாமதம்
கேரள மாநிலம் குருவாயூரிலிருந்து செங்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் ரயிலில் இரண்டு பெட்டிகளுக்கு இடையிலான இணைப்பு துண்டிக்கப்பட்டதால் 20 நிமிஷங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.
குருவாயூரிலிருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் ரயில், தமிழக-கேரள எல்லைப் பகுதியான ஆரியங்காவு பகவதிபுரம் இடையே வந்தபோது பெரும் சத்தம் கேட்டதால் ரயிலின் ஓட்டுநா் சுதாரித்து, உடனடியாக ரயிலை நிறுத்திவிட்டு, பெட்டிகளை சோதனை செய்துள்ளாா். அப்போது, 6, 7ஆவது பெட்டிகளை இணைக்கும் இணைப்பு உடைந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை தற்காலிகமாக சரிசெய்த ஓட்டுநா், ரயிலை குறைவான வேகத்தில் இயக்கி செங்கோட்டை ரயில் நிலையத்துக்கு கொண்டு வந்தாா். அங்கு, சேதமடைந்த இணைப்பு சரிசெய்யப்பட்டு 20 நிமிஷங்களுக்கு பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது.