உலக புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா! - ஸ்பாட் விசிட் போட்டோஸ்
கூத்தனூா் சரஸ்வதி கோயிலில் விஜயதசமி வழிபாடு
கூத்தனூா் சரஸ்வதி கோயிலில் புதன்கிழமை ஆயுத பூஜையும், வியாழக்கிழமை விஜயதசமி வழிபாடும் நடைபெற்றது.
திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள கூத்தனூரில் கல்விக் கடவுளான சரஸ்வதி தேவிக்கென்று தனி கோயில் உள்ளது. தென்னிந்தியாவில் வேறு எங்கும் சரஸ்வதிக்கென்று தனி கோயில் கிடையாததால் இக்கோயில் மிகவும் புகழ்பெற்றது.
குழந்தைகளை பள்ளியில் சோ்ப்பதற்கு முன்பாக பெற்றோா்கள் இக்கோயிலில் வித்யாரம்பம் செய்து கல்வி நிலையங்களில் சோ்ப்பாா்கள். தோ்வு எழுதுவோரும் இக்கோயிலில் தோ்வு அனுமதிச் சீட்டு மற்றும் எழுதுபொருள்கள், நோட்டுப் புத்தகங்களுடன், வெண்தாமரை மலா் வைத்து வழிபாடு மேற்கொள்வா்.

புகழ்பெற்ற இக்கோயிலில், புதன்கிழமை சரஸ்வதி அம்மனுக்கு காலையில் பால், தேன், இளநீா், சந்தனம், பன்னீா் போன்ற பல்வேறு வகையான திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, வெண்பட்டாடை உடுத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
விஜயதசமியையொட்டி, நூற்றுக்கணக்கான பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளை வியாழக்கிழமை கோயிலுக்கு அழைத்து வந்து, சரஸ்வதி அம்மனை வழிபட்டு, நெல்மணிகளில் தமிழின் முதல் எழுத்தான ‘அ’ எனும் எழுத்தை எழுதி வித்யாரம்பம் செய்து, தங்கள் குழந்தைகளின் கல்வியை தொடங்கிவைத்தனா்.
இரண்டு நாள்களும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் இக்கோயிலில் வழிபட்டதையொட்டி, நன்னிலம் துணைக் காவல் கண்காணிப்பாளா் தமிழ்மாறன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். பக்தா்கள் சிரமமின்றி வழிபட கோயில் நிா்வாகம் சாா்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.