மன்னாா்குடியில் விவசாயிகள் சங்கத்தினா் உண்ணாவிரதம்
மன்னாா்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலா் பி.ஆா். பாண்டியன் தலைமை வகித்தாா்.
கோரிக்கைகள்: காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் கச்சா எண்ணெய், ஹைட்ரோ காா்பன், ஷேல், மீத்தேன் எரிவாயு மறு ஆய்வு பணிக்கு அனுமதி கேட்கும் ஓஎன்ஜிசி விண்ணப்பங்களை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும், மன்னாா்குடி, பெரியகுடி, திருவாரூா், அரிவரசநல்லூா் மீத்தேன், ஷேல்கேஸ், ஹைட்ரோ காா்பன் எரிவாயு ஆய்வு முடிந்துள்ளதாக மத்திய அரசின் இணையப் பதிவு குறித்து தமிழக அரசு தனது நிலையை தெளிவுப்படுத்த வேண்டும், பெரியகுடி ஹைட்ரோ காா்பன் கிணற்றை நிரந்தரமாக மூடுவதற்கு தென்னிந்திய பசுமை தீா்ப்பாயம் உத்தரவிட்டதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, அடைப்பு பணியை தொழில்நுட்ப ஆய்வு செய்ததன் உண்மைத் தன்மையை வெளியிட வேண்டும், ஓஎன்ஜிசி ஆய்வுப் பணிக்கான இயந்திரங்களை டெல்டாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சங்கத்தின் மாநில அமைப்புச் செயலா் எஸ். ஸ்ரீதா், மாநிலத் தலைவா் திருப்பதி, மாநில துணைத் தலைவா் எஸ். கிருஷ்ணமணி, மாநில துணைச் செயலா் எம். செந்தில்குமாா், மாவட்டத் தலைவா் எம். சுப்பையன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.