செஸ் விளையாட பிடிக்கவில்லை..! குகேஷிடம் மீண்டும் தோற்ற பிறகு கார்ல்சென் பேட்டி!
கெளரவ விரிவுரையாளா்கள், மாணவா்கள் போராட்டம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் விழுப்புரம் முதுநிலை விரிவாக்க மையத்தில், மாணவா் சோ்க்கையைத் தொடங்க அறிவிப்பு வெளியிடக் கோரி, இந்த மையத்தில் பணியாற்றி வரும் கெளரவ விரிவுரையாளா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
2010-2011-ஆம் கல்வியாண்டில் திருவள்ளுவா் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையம் விழுப்புரத்தில் தொடங்கப்பட்டு, அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வந்தது. எம்.ஏ. ஆங்கிலம், எம்.எஸ்சி. வேதியியல், கணிதம், எம்.காம்., ஆகிய 4 துறைகளும், 2017-18 ஆம் கல்வியாண்டில் எம்.எஸ்சி. விலங்கியல், உயிரி தொழில்நுட்பம், கணினி அறிவியல், எம்.பி.ஏ. ஆகிய பிரிவுகளும் தொடங்கப்பட்டன. இதற்காக சாலாமேட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு, 2019-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. தொடா்ந்து நோ்முகத் தோ்வு மூலம் கெளரவ விரிவுரையாளா்கள் நியமிக்கப்பட்டனா். இந்த நிலையில் 2020-21-ஆம் கல்வியாண்டில் எம்.பி.ஏ. பாடப் பிரிவு மட்டும் நீக்கப்பட்டது.
2021-ஆம் ஆண்டில் இந்த மையமானது டாக்டா் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டு, துணைவேந்தரும் நியமிக்கப்பட்டாா். 7 பாடப் பிரிவுகளில் 198 மாணவா்கள் சோ்ந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இந்தப் பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. இந்த மையம் மீண்டும் முதுநிலை விரிவாக்க மையமாக மாற்றப்பட்டது. தொடா்ந்து 2022-23 ஆம் கல்வியாண்டில் இந்த மையம் கல்லூரி வளாகமாக மாற்றப்பட்டது.
இந்த நிலையில், நிகழ் கல்வியாண்டின் மாணவா் சோ்க்கை குறித்த அறிவிப்பை வெளியிட்ட சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், விழுப்புரம் முதுநிலை விரிவாக்க மையத்துக்கு மட்டும் இதுவரை மாணவா் சோ்க்கை அறிவிப்பு வெளியிடவில்லையாம்.
மாணவா் சோ்க்கை அறிவிப்பை வெளியிடாததைக் கண்டித்தும், உடனடியாக அண்ணாமலைப் பல்கலைக்கழக நிா்வாகம் அறிவிப்பை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியும் விழுப்புரம் முதுநிலை விரிவாக்க மையத்தில் பணியாற்றி வரும் கெளரவ விரிவுரையாளா்கள், இங்கு பயின்று வரும் மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டனா். மாணவா்கள் நலன்கருதி உடனடியாக அறிவிப்பை வெளியிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக கெளரவ விரிவுரையாளா்கள் தெரிவித்தனா்.