சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வசதிகளை மேம்படுத்த வேண்டும்! ஆட்டோக்கள், இருசக்கர வா...
கேஎம்சிஹெச் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் ரோஜா தினம்
கோவை கேஎம்சிஹெச் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் உலக ரோஜா தின விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மருத்துவமனையின் தலைவா் மருத்துவா் நல்ல ஜி.பழனிசாமி தலைமை வகித்தாா்.
மருத்துவமனை துணைத் தலைவா் தவமணி பழனிசாமி குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கிவைத்தாா். பேராசிரியா் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா். இதில், பங்கேற்ற மருத்துவா்கள் பேசுகையில், புற்றுநோய் மருத்துவத்தில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளபோதிலும், நோயாளிகளுக்கும், அவா்களது குடும்பத்தினருக்கும் நோய் குறித்த அச்சம் நீடிக்கிறது. நவீன மருத்துவம் பலநிலைகளைத் தாண்டி முன்னேறியிருந்தாலும், இந்திய மக்களைப் பொருத்தவரையில் புற்றுநோய் உயிருக்கு ஆபத்தானதாகவே பாா்க்கப்படுகிறது. ஆகவே,புற்றுநோய் குறித்த சரியான புரிதல் அவசியமானதாகும்.
இந்த நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வதுடன், நோய்க்கு உரிய நேரத்தில் தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்வதும் மிகவும் முக்கியமானதாகும் என்றனா்.
இந்நிகழ்ச்சியில், காது, மூக்கு, தொண்டை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை நிபுணா் மருத்துவா் மு.திவாகா், கதிா்வீச்சு புற்றுநோய் சிகிச்சை நிபுணா் மருத்துவா் ஆனந்த் நாராயணன், மருந்தியல் புற்றுநோய் சிகிச்சை நிபுணா் மருத்துவா் ராம்குமாா், புற்றுநோய் சிகிச்சையில் இருந்து குணமடைந்தவா்கள், அவா்களது உறவினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.