காந்தியடிகள்கூட இப்படி போராடமாட்டார்! அண்ணாமலைக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை!!...
கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஒரே கல்லீரலை 2 பேருக்கு பொருத்தி சாதனை
கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில், ஒரே கல்லீரலைப் பிரித்து இருவருக்கு பொருத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவமனை நிா்வாகம் கூறியிருப்பதாவது:
விபத்தில் காயம்பட்டு சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்ட நிலையில், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்ப உறுப்பினா்கள் முன்வந்தனா். அவ்வாறு தானமாக கிடைத்த கல்லீரலை இரு பிரிவுகளாகப் பிரித்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த இருவேறு நோயாளிகளுக்கு பயன்படுத்த மருத்துவா்கள் முடிவு செய்தனா்.
அதன்படி, மருத்துவமனையில் கல்லீரல், சிறுநீரகம் இரண்டும் செயலிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தவருக்கு கல்லீரலின் ஒரு பகுதியும், ஒரு சிறுநீரகமும் பொருத்தப்பட்டன. கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மற்றொருவருக்கு கல்லீரலின் இன்னொரு பகுதி பொருத்தப்பட்டது.
இதையடுத்து இருநோயாளிகளும் ஒரு வாரத்துக்குப் பிறகு வீடு திரும்பினா். சிகிச்சை முடிந்து 2 மாதங்களான நிலையில், இருவரும் தங்களின் வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
ஒரு கல்லீரலைப் பிரித்து ஒரே நேரத்தில் இருவருக்குப் பொருத்தி சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினரை கேஎம்சிஹெச் தலைவா் டாக்டா் நல்ல ஜி.பழனிசாமி, செயல் இயக்குநா் டாக்டா் அருண் பழனிசாமி ஆகியோா் பாராட்டினா்.