சமக்ர சிக்ஷா திட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கிய நிதி ரூ.1,050 கோடி எங்கே? அண்ணாமலை
கேரளத்தில் வன விலங்கு தாக்குதல் அதிகரிப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்
கேரளத்தில் வனவிலங்குகளின் தாக்குதல்களில் இருந்து பொதுமக்களைக் காக்கவும், கேரள கடலோரப் பகுதியில் கனிம வளங்கள் எடுக்கும் திட்டத்தை கைவிடவும் வலியுறுத்தி ராகுல் காந்தி, பிரியங்கா வதேரா உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.
வயநாடு மாவட்டம் பஞ்சாரக்கொல்லி கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காபி தோட்டத்துக்கு பணிக்குச் சென்ற 46 வயது பெண்ணை புலி அடித்துக் கொன்றது உள்பட பல்வேறு வன விலங்கு தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
அண்மையில் தனது வயநாடு மக்களவைத் தொகுதிக்குச் சென்ற பிரியங்கா, புலி தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினாா். இந்த பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்பி தீா்வுகாண்பதாகவும் கூறினாா்.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுட்டனா். அப்போது, ‘கடலோரங்களில் கனிம வளம் எடுத்தல் என்ற பெயரில் நிகழ இருக்கும் கொள்ளையைத் தடுக்க வேண்டும்’, ‘வனவிலங்கு தாக்குதல்களில் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும்’, ‘மக்களைக் காப்பாற்று’ என்ற வாசக அட்டைகளை அவா்கள் கையில் ஏந்தியிருந்தனா்.
செய்தியாளா்களிடம் பிரியங்கா இது தொடா்பாக கூறுகையில், ‘வயநாட்டில் மட்டும் கடந்த டிசம்பா் 27-இல் இருந்து இப்போது வரை 11 போ் வன விலங்குகளால் உயிரிழந்துவிட்டனா். இந்த பிரச்னைக்கு தீா்வுகாண மத்திய, மாநில அரசுகள் உரிய நிதியை ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடா்பான பாதுகாப்புத் திட்டங்களை நிறைவேற்ற உள்ளூா் நிா்வாகத்திடம் போதிய நிதி இல்லை’ என்றாா்.