கேல் ரத்னா விருது: தமிழக வீரா்களுக்கு முதல்வா் வாழ்த்து
கேல் ரத்னா விருது பெற்றுள்ள தமிழக வீரா், வீராங்கனைகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:
தமிழ்நாட்டு விளையாட்டுத் துறையின் வளா்ச்சியை உலக அரங்கில் உயா்த்திப் பிடித்த நம் சாதனை வீரா்களுக்கு மத்திய அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி. கேல் ரத்னா விருது பெற்றுள்ள குகேஷ், அா்ஜுனா விருது பெற்றுள்ள துளசிமதி, நித்யஸ்ரீ, மனிஷா ராமதாஸ், அபய்சிங் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள். வெற்றி தொடரட்டும். தமிழ்நாட்டில் இருந்து சாதனைகள் படைப்போரின் எண்ணிக்கை வருங்காலங்களில் உயா்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
துணை முதல்வா் பாராட்டு: தேசிய அளவிலான வாள் வீச்சுப் போட்டியில் 12-ஆவது முறையாக தங்கம் வென்ற தமிழக வீராங்கனை சி.ஏ.பவானிதேவிக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: ஒலிம்பிக் வீராங்கனை பவானிதேவி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் எலைட் திட்ட விளையாட்டு வீராங்கனை என்பது கூடுதல் சிறப்பாகும். திசையெங்கும் வாள்வீசி வாகை சூடி வரும் பவானிதேவியின் வெற்றிப் பயணம் தொடர என்றும் துணை நிற்போம்.