கைதான தவெக நிர்வாகிகளுடன் பேசிய விஜய்!
சென்னையில் கைது செய்யப்பட்ட நிர்வாகிகளுடன் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தொலைபேசியில் பேசினார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் கோட்டூரைச் சோ்ந்த பிரியாணி கடைக்காரா் ஞானசேகரன் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது கைப்பட கடிதம் எழுதி வெளியிட்டார். விஜய் எழுதிய கடிதத்தை தவெக தொண்டர்கள் பொதுமக்களுக்கு விநியோகித்தனர். ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகம், பூக்கடை உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கு அக்கடிதத்தை வழங்கினர்.
காவல் துறையினர் அனுமதியையும் மீறி, கடிதம் வழங்கியதால் தவெக தொண்டர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதனிடையே கைதான, தொண்டர்களை பார்க்கச் சென்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்தையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அமைதியான முறையில் கடிதம் கொடுத்ததற்கே கைது செய்வதா? என காவல் துறைக்கு ஆனந்த கண்டனம் தெரிவித்துள்ளார். சிறிது நேரம் கழித்து கைதானவர்கள் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கைதான தொண்டர்களுடன் தவெக தலைவர் விஜய் தொலைபேசியில் பேசினார்.