15 மேம்பாலங்கள், இருவழி, சாலை விரிவாக்கப்பணிகளுக்கு நிதி ஒப்புதல்: மத்திய அமைச்ச...
பள்ளிகள் திறப்பு: முதல் நாளில் மூன்றாம் பருவ பாடப் புத்தகங்கள்!
தமிழகம் முழுவதும் அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மூன்றாம் பருவ புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்திருந்தது.
அரையாண்டு விடுமுறை முடிந்து, இன்று காலை புத்தாண்டின் முதல் பள்ளி நாளாக அமைந்திருந்ததால், மாணவ, மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.
அவர்களது உற்சாகத்தை இரட்டிப்பாக்கும் வகையில், மாணவர்களுக்கு மூன்றாம் பருவ புத்தகங்கள் வழங்கப்பட்டன. சேலம் மாவட்டம் குகை மூங்கப்பாடி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் புத்தாண்டில் கையில் கிடைத்த புதிய புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு மாணவ, மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறைக்குப் பிறகு, ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து வகை பள்ளிகளிலும் அரையாண்டு மற்றும் 2-ஆம் பருவத் தோ்வுகள் கடந்த டிச. 9 முதல் 23-ஆம் தேதி வரை நடத்தப்பட்டன. தொடா்ந்து, டிச. 24-ஆம் தேதி தொடங்கி புதன்கிழமை வரை மாணவா்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டது.
விடுமுறை முடிந்து, பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. புத்தாண்டில் முதல் நாள் வகுப்பு என்பதால் மாணவர்களும் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை தந்துள்ளனர்.
மாணவா்களுக்கு தேவையான 3-ஆம் பருவத்துக்கான பாடநூல்கள், சீருடைகள் உள்ளிட்ட நலத்திட்ட கல்விப் பொருள்களை வழங்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த வகையில், பல மாவட்டங்களில் இயங்கும் அரசுப் பள்ளிகளில் இன்று மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.