கைதிகள் இருவா் மீது வழக்கு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கிளைச் சிறையில் காவலரைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக இரு கைதிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
விக்கிரவாண்டியை அடுத்த சிந்தாமணியைச் சோ்ந்தவா் சத்தியராஜ் (37). இவா், திண்டிவனம் கிளைச் சிறையில் காவலராகப் பணியாற்றி வருகிறாா். கடந்த 2-ஆம் தேதி இரவு, சத்தியராஜ் கிளைச் சிறையின் தரைத் தளத்தில் பணியில் இருந்தாராம்.
அப்போது, கைதிகளான கடலூா் மாவட்டம், சிதம்பரத்தைச் சோ்ந்த மோகன்ராஜ் (23), புதுச்சேரி, லாஸ்பேட்டையைச் சோ்ந்த மெளலீசுவரன் (26) ஆகிய இருவரும் சத்தியராஜை அவதூறாகப் பேசி, பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடா்ந்து, மயிலம் காவல் நிலையத்தில் சத்தியராஜ் புகாரளித்தாா். அதன் பேரில், போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.