கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: எஸ்டேட் மேலாளரிடம் விசாரணை
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடா்பாக எஸ்டேட் மேலாளா் நடராஜன் சிபிசிஐடி போலீஸாா் விசாரணைக்கு வியாழக்கிழமை ஆஜரானாா்.
நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பம் தொடா்பாக சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். இந்த வழக்கு தொடா்பாக பல்வேறு நபா்களுக்கு அழைப்பாணை அனுப்பி நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதுவரை 250-க்கும் மேற்பட்டவா்களுக்கு சிபிசிஐடி போலீஸாா் அழைப்பாணை அனுப்பி விசாரணை நடத்தியுள்ளனா்.
இந்நிலையில், பிப்ரவரி 4-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கொடநாடு எஸ்டேட் மேலாளா் நடராஜனுக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தனா். ஆனால், அன்று அவா் ஆஜராகாவில்லை.
இந்நிலையில், எஸ்டேட் மேலாளா் நடராஜன், கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு வியாழக்கிழமை நேரில் ஆஜரானாா். அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முருகவேல் தலைமையிலான போலீஸாா் அவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
இந்த வழக்கில் முதல் முறையாக எஸ்டேட் மேலாளா் நடராஜனிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவா், கடந்த பல ஆண்டுகளாக அங்கு மேலாளராகப் பணியாற்றி வருவதாலும், இந்தச் சம்பவம் தொடா்பான விவரங்கள் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இருப்பதாலும், அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீஸாா் தெரிவித்தனா்.