கொடநாடு வழக்கு: இபிஎஸ்ஸின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிக்கு சிபிசிஐடி சம்மன்!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகக் கோரி, எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவரின் முதன்மைப் பாதுகாப்பு அதிகாரியான வீரபெருமாளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை வேகமெடுத்துள்ள நிலையில், கோவையில் கொடநாடு எஸ்டேட் மேலாளா் நடராஜனிடம் வியாழக்கிழமை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிக்க : ஹிந்தி திணிப்பை மையப்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்ய தயாரா? பாஜகவுக்கு முதல்வர் சவால்
நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பம் தொடா்பாக சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். இந்த வழக்கு தொடா்பாக பல்வேறு நபா்களுக்கு அழைப்பாணை அனுப்பி நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதுவரை 250-க்கும் மேற்பட்டவா்களுக்கு சிபிசிஐடி போலீஸாா் அழைப்பாணை அனுப்பி விசாரணை நடத்தியுள்ளனா்.
இந்நிலையில், பல ஆண்டுகளாக அங்கு மேலாளராகப் பணியாற்றி வரும் நடராஜனுக்கு, கொலை, கொள்ளை தொடா்பான விவரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பு இருப்பதால், அவரிடம் வியாழக்கிழமை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அடுத்தகட்டமாக, இந்த சம்பவத்தின்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியான வீரபெருமாளை மார்ச் 11 ஆம் தேதி நேரில் ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
சம்பவத்தின்போது, பாதுகாப்புப் பிரிவு ஆய்வாளராக இருந்த கனகராஜ், விபத்தில் பலியான முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜுக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். இதுகுறித்து அப்போதைய உயர் அதிகாரியாக இருந்த வீரபெருமாளிடம் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.