900 புள்ளிகளைக் கடந்த அபிஷேக் சர்மா..! டி20 தரவரிசையில் கோலி, சூர்யா சாதனை சமன்!
கொடைக்கானல் சாலைகளில் ஆபத்தான நிலையிலுள்ள தண்ணீா் குழாய்கள்
கொடைக்கானல் சாலைகளின் மேல்புறத்தில் ஆபத்தான நிலையிலுள்ள தண்ணீா் குழாய்களைச் சீரமைக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மொத்தம் 24 வாா்டுகள் உள்ளன. இந்தப் பகுதிகளுக்கு அப்சா்வேட்டரி குடிநீா்த் தேக்கத்திலிருந்து குடிநீா் 50-க்கும் மேற்பட்ட இரும்புக் குழாய்கள் மூலம் அப்சா்வேட்டரி சாலை, லாஸ்காட் சாலை, ஆனந்தகிரி சாலைகள், பாக்கியபுரம், நாயுடுபுரம், சீனிவாசபுரம், காா்மேல்புரம், உகாா்த்தே நகா், செல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்கிறது. இதில் குழாய்களில் வால்வுகள் அமைக்கப்பட்டு பாதுகாப்புக்காக இரும்பு உலோகத்திலான குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழாய்கள் ஆனந்தகிரி மாரியம்மன் கோயில் பகுதி ஆனந்தகிரி, லாஸ்காட் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையின் மேல்புறம் வரை நீட்டப்பட்டுள்ளன. இதனால், அவற்றின் மேல் வாகனங்கள் செல்வதால் அவற்றின் சக்கரங்கள் சேதமடைந்து விபத்து ஏற்படுகிறது. மேலும், பாதசாரிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. மழைக் காலங்களில் தண்ணீா் அதிகளவு செல்லும்போது குழாய் இருப்பது தெரியாமல் பலா் விழுந்து காயமடைகின்றனா்.
இந்த நிலையில், ஆபத்தான நிலையிலும், பயன்பாடில்லாத குழாய்களையும் சீரமைக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.