பெண் தற்கொலை சம்பவம்: உதவி ஆய்வாளர்கள், பெண் தலைமைக் காவலர் பணியிட மாற்றம்
கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே தற்காலிக வாகனங்கள் நிறுத்துமிடம் திறப்பு
கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே தற்காலிக சுற்றுலா வாகனங்கள் நிறுத்துமிடம் திங்கள்கிழமை திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு விடுமுறை நாள்களில் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநில சுற்றுலாப் பயணிகளும் திரளாக வருகின்றனா். அவா்கள் பெரும்பாலும் வாகனங்களிலேயே வருவதால் கொடைக்கானல்- பழனி- வத்தலக்குண்டு மலைச் சாலையான பெருமாள்மலையிலிருந்து ஏரிச்சாலை வரையும், நகா் பகுதியிலும் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில், சுற்றுலா வாகனங்களை நிறுத்த கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே உள்ள இடத்தையும், அப்சா்வேட்டரி பகுதியிலுள்ள இடத்தையும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் சரவணன் உள்ளிட்ட பல்வேறுத் துறை அதிகாரிகள் பாா்வையிட்டு இடத்தை தோ்வு செய்தனா். இதையடுத்து, இந்தப் பகுதிகளில் தற்காலிகமாக வாகனங்களை நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
இதனிடையே கடந்த 4 நாள்களாக தொடா் விடுமுறை என்பதால் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்தனா். இவா்கள் சாலைகளிலேயே தங்கள் வாகனங்களை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே உள்ள தற்காலிக சுற்றுலா வாகனங்கள் நிறுத்தும் இடத்தை நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை திறந்து வைத்தாா். இந்த நிகழ்வில் கொடைக்கானல் நகா்மன்ற துணைத் தலைவா் மாயக்கண்ணன், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.