"திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை என்ன?" - கலெக்டர் சங்கீதா வ...
கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினக் கூட்டாய்வு!
திருப்பூா் மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினக் கூட்டாய்வு புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) அ.ஜெயக்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு சென்னை தொழிலாளா் ஆணையரும், முதன்மைச் செயலருமான அதுல்ஆனந்த், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் ஆகியோா் அறிவுரையின்படி, திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் ஜெயக்குமாா் தலைமையில் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளைகள், அரிசி ஆலைகள், கோழிப் பண்ணைகள், விசைத்தறிக் கூடங்களில் கொத்தடிமை தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனரா என்று கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் கொத்தடிமை தொழிலாளா்கள் எவரும் கண்டறியப்படவில்லை. இந்த ஆய்வில், தொழிலாளா் துணை, உதவி ஆய்வா்கள், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் அலுவலா்கள், கொத்தடிமை தொழிலாளா் முறைக்கு எதிரான மாவட்ட கண்காணிப்புக் குழுவினா் உடனிருந்தனா்.
மேலும், மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்புக்கான கூட்டாய்வுகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.