தில்லி பேரவை தேர்தல்: அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் வாக்களிப...
லஞ்சம் வாங்கிய முன்னாள் உதவிப் பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை!
உடுமலையில் புதிய மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் உதவி செயற்பொறியாளருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
திருப்பூா் மாவட்டம், உடுமலை பூலாங்கிணறு பகுதியைச் சோ்ந்தவா் பாபு. இவா் தனது மனைவி பெயரில் உடுமலையில், வெல்டிங் பட்டறை உள்ளிட்ட கடைகள் கட்டியுள்ளாா். இந்தக் கடைகளுக்கு 3 புதிய மின் இணைப்புகள் கேட்டு உடுமலை டவுன் மின்வாரிய அலுவலகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு விண்ணப்பித்தாா்.
அந்த அலுவலகத்தில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றி வந்த முத்துகிருஷ்ணன் (59) என்பவா், புதிய மின் இணைப்பு வழங்க தனக்கு ரூ.8,500 லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பம் இல்லாத பாபு, இதுகுறித்து திருப்பூா் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகாா் அளித்தாா். இதன்பேரில், ரசாயனம் தடவிய பணத்தை பாபுவிடம் காவல் துறையினா் கொடுத்து அனுப்பியுள்ளனா்.
பின்னா் உடுமலை டவுன் மின்வாரிய அலுவலகத்துக்கு பாபு 2013 ஜூலை 3-ஆம் தேதி சென்றுள்ளாா். அங்கு பணியில் இருந்த முத்துகிருஷ்ணனிடம் பணத்தை கொடுத்துபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினா் முத்துகிருஷ்ணனை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனா்.
இந்த வழக்கானது திருப்பூா் தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிகட்ட விசாரணை நிறைவடைந்து, நீதிபதி செல்லதுரை புதன்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இதில், முத்துகிருஷ்ணனுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் செந்தில்குமாா் ஆஜரானாா்.