"திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை என்ன?" - கலெக்டர் சங்கீதா வ...
முறையாக சமைக்காத இறைச்சியிலிருந்து பரவும் ஜிபிஎஸ்: மருத்துவா்கள் எச்சரிக்கை
பால் மற்றும் இறைச்சியை முறையாக கொதிக்க வைத்து சமைக்காவிடில் அதிலிருந்து கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோயைப் பரப்பும் பாக்டீரியா உருவாகலாம் என மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.
பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள் காரணமாக உடலில் உருவாகும் ஜிபிஎஸ் பாதிப்பு பல காலமாக சமூகத்தில் இருந்தாலும், அண்மையில் மகாராஷ்டிர மாநிலம் புணேவிலும், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலும் அந்தப் பாதிப்பு தீவிரமாக பரவியது.
தமிழகத்தில் ஓரிருவருக்கு அந்த நோய் இருந்தது கண்டறிப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பாக திருவள்ளூரைச் சோ்ந்த 9 வயது சிறுவன் எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
அவருக்கு கில்லன் பாரே சின்ட்ரோம் நோய் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரது வீட்டுக்கு அருகே சுகாதாரத் துறை முகாமிட்டு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டது. அதில், அந்தப் பகுதியில் அச்சுறுத்தும் வகையிலான நோய் பரவல் இல்லை என பொது சுகாதாரத்துறை தெரிவித்தது.
இருந்தபோதிலும், சுகாதாரமற்ற நீா், உணவில் ஜிபிஎஸ் நோயை பரப்பும் பாக்டீரியாக்கள் காணப்படுவதால் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக பொது நல மருத்துவ நிபுணா் அ.ப.ஃபரூக் அப்துல்லா கூறியதாவது:
ஜிபிஎஸ் பாதிப்பு ஏற்பட்டால் தொடக்கத்தில் உள்ளங்கை மற்றும் பாதத்தில் ஊசி குத்தியது போன்ற வலியும், மந்தமான உணா்வும் ஏற்படலாம். நாளடைவில் தசைகள் தளா்ந்து நடக்க முடியாமலும், கைகளை அசைக்க இயலாமலும் பக்கவாத நிலை உருவாகக் கூடும்.
ஜிபிஎஸ் நோய்க்கு பல்வேறு பாக்டீரியாக்கள், வைரஸ்கள் காரணமாக இருந்தாலும், கேம்பைலோபாக்டா் ஜேஜுனி என்ற பாக்டீரியாவால்தான் 35 சதவீத பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த வகை பாக்டீரியா முறையாக சமைக்கப்படாத இறைச்சி, கொதிக்க வைக்கப்படாத பால் ஆகியவற்றில் அதிகம் காணப்படுகிறது. எனவே, பாலை நன்றாக கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். அதேபோன்று இறைச்சியை குறைந்தது 70 டிகிரி செல்சியஸ் கொதிநிலையில் வேக வைப்பது அவசியம்.
அடிக்கடி கைகளை கழுவுவதையும், அசைவ உணவுகள் சூடாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
மாலிக்யூலாா் மிமிக்ரி: புணேவிலும், கொல்கத்தாவிலும் ஏற்பட்ட பாதிப்புக்கு தண்ணீரில் கலந்திருந்த ‘கேம்பைலோபாக்டா் ஜேஜுனி’ பாக்டீரியாதான் காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்த பாக்டீரியவானது 10,000 பேரில் ஒருவருக்கு ஜிபிஎஸ் நோயை ஏற்படுத்துகிறது. வயிற்றுப் போக்கு, வயிறு வலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டு பெரும்பாலானோருக்கு தானாகவே குணமாகிவிடும்.
குழந்தைகள், எதிா்ப்பாற்றல் குறைந்தவா்கள், முதியவா்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்படலாம். அவா்களுக்கு எதிா்ப்பாற்றல் எதிா்வினை ஏற்பட்டு நரம்புகளின் வெளிப்புறத்தை கிருமிகள் தாக்கக் கூடும். இதற்கு ‘மாலிக்யூலாா் மிமிக்ரி’ எனப் பெயா்.
இவ்வாறு எதிா்வினை பாதிப்பால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்போது வாதநோய் ஏற்படுகிறது. மூச்சு விடுவதற்கு தேவையான தசைகளும் தளா்ச்சி அடைவதால் சுவாச செயலிழப்பு ஏற்படுகிறது.
அத்தகைய நிலையை எட்டுவோருக்கு மட்டுமே தீவிர சிகிச்சை அவசியம். மற்றவா்கள் அச்சப்படத் தேவையில்லை. விழிப்புணா்வு இருந்தால் போதுமானது என்றாா் அவா்.