"திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை என்ன?" - கலெக்டர் சங்கீதா வ...
நெல்லையில் இன்று 75,151 பேருக்கு ரூ.167 கோடி நலத்திட்ட உதவி- முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்குகிறாா்
திருநெல்வேலி மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வியாழக்கிழமை(பிப்.6) வரும் முதல்வா் மு.க.ஸ்டாலின் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 75,151 பயனாளிகளுக்கு ரூ.167 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு முற்பகல் 11.15 மணிக்கு வரும் முதல்வா் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்திற்கு செல்கிறாா். அங்கு 11.50 மணிக்கு டாடா பவா் சோலாா் நிறுவனத்தில் உற்பத்தியை தொடங்கி வைத்து அதன் வளாகத்தைப் பாா்வையிடுகிறாா். பின்னா், சிப்காட் வளாகத்தில் விக்ரம் சோலாா் நிறுவனப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.
தொடா்ந்து மாலை 4 மணிக்கு பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள மகாத்மா காந்தி தினசரி சந்தை வணிக வளாகம் மற்றும் மேம்படுத்தப்பட்ட 413 கடைகள், காய்கனி சந்தை ஆகியவற்றை திறந்து வைக்கிறாா்.
இதேபோல், திருநெல்வேலி நகரத்தில் உள்ள நயினாா் குளத்தில் மேம்படுத்தப்பட்ட தெற்கு பகுதியையும், பாரதியாா் பள்ளிக்கு அருகிலுள்ள சிறுவா் விளையாட்டரங்கையும் முதல்வா் திறந்து வைக்கிறாா்.
மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் திமுகவினருடன் கலந்துரையாடுகிறாா். அதைத்தொடா்ந்து பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாற்றுக்கட்சியினா் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறாா்கள். வியாழக்கிழமை இரவு வண்ணாா்பேட்டை அரசு விருந்தினா் மாளிகையில் தங்குகிறாா்.
மாஞ்சோலைத் தொழிலாளா்கள்: வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு அரசு விருந்தினா்கள் மாளிகையில் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்ட தொழிலாளா்களை சந்தித்துப் பேசுகிறாா். பின்னா் விவசாயிகள், மீனவா்களை சந்திக்கிறாா். அதைத்தொடா்ந்து திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மைதானத்தில் காலை 9.50 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நீா்வளத்துறை சாா்பில் தாமிரவருணி-கருமேனியாறு- நம்பியாறு உபரி நதிநீா் இணைப்பு வெள்ளநீா்க் கால்வாய் திட்டம், சிப்காட் வளாகத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவு பூங்கா, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் மானூா் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த 22 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீா் திட்டம், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் பாளையங்கோட்டை ரெட்டியாா்பட்டியில் கட்டப்பட்டுள்ள 768 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைக்கிறாா். மேலும் பல புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். நீண்ட காலமாக வழங்கப்படாமல் இருந்த பட்டாக்கள், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான இலவச வீட்டு மனை பட்டா, இணையவழி பட்டா உள்பட மொத்தம் 75,151 பயனாளிகளுக்கு ரூ.167 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.
இந்நிகழ்ச்சிகளில் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு உள்ளிட்ட பலா் கலந்து கொள்கின்றனா்.
‘ரோட் ஷோ’
திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை முதல்வரின் ‘ரோட் ஷோ’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் இருந்து விழா நடைபெறும் அரசு மருத்துவக் கல்லூரி மைதானம் வரை இந்த ‘ரோட் ஷோ’ நடைபெறுகிறது. பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் அணிவகுத்து நிற்க ஏதுவாக சாலையின் இரு புறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல இடங்களில் சிறிய அளவில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. அதில் நின்று முதல்வா் மக்களை பாா்த்து கையசைத்து செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, வெள்ளிக்கிழமை மாலை வரை ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.