மூன்றுமாத காலத்துக்குள் அனைத்துப் பகுதிகளிலும் தினசரி குடிநீா்: மேயா்
பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்
பழனி தைப்பூசத் திருவிழா பெரியநாயகி அம்மன் கோயிலில் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பழனியில் நடைபெறும் இரு பெரும் விழாக்களில் தைப்பூசத் திருவிழா மிகவும் புகழ் பெற்றது.
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை இரவு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி, அஸ்த்ர தேவா் பூஜை ஆகியவை நடைபெற்றன.
இந்தநிலையில், புதன்கிழமை காலை விக்னேஷ்வர பூஜை, புண்யாவாசனம் ஆகியவை நடத்தப்பட்டு, வள்ளி, தேவசேனா சமேதா் முத்துக்குமாரசுவாமிக்கு பால், பன்னீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சோடஷ அபிஷேகமும், தொடா்ந்து சோடஷ உபசாரமும் நடைபெற்றன. இதையடுத்து, சுவாமி கொடிக்கட்டி மண்டபத்துக்கு எழுந்தருளினாா்.
பின்னா், கொடி மண்டபத்தில் 6 கலசங்கள் வைத்து மயூரயாகம் நடத்தப்பட்டது. மேலும், சேவல், மயில், வேல், பூஜை பொருள்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக் கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
முன்னதாக, இந்தக் கொடி நான்கு ரத வீதிகளிலும், கோயிலின் உள்பிரகாரத்திலும் வலம் வரச் செய்யப்பட்டு, கொடிக்கட்டி மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதையொட்டி, மூலவா், விநாயகா் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும், உற்சவ மூா்த்திகளுக்கும் காப்புக் கட்டப்பட்டது.
ஓதுவா மூா்த்திகள் திருமுறைப் பாடல்கள், வாத்ய பூஜை, கொடிப்பண், சூா்ணிகை வா்ணித்தல் உள்ளிட்டவற்றைப் பாடினா். தொடா்ந்து, கோயில் தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்துக்குப் பிறகு, கொடிக்கட்டி மண்டபத்துக்கு எழுந்தருளிய வள்ளி, தேவசேனா சமேதா் முத்துக்குமாரசுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
பூஜைகளை தலைமை குருக்கள் அமிா்தலிங்கம், ஸ்தானீகா், செல்வசுப்ரமண்ய குருக்கள் உள்ளிட்டோா் செய்தனா்.
கொடியேற்ற நிகழ்வில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணியன், அறங்காவலா்கள் தனசேகா், பாலசுப்பிரமணியம், பாலசுப்பிரமணி, அன்னபூரணி, கண்காணிப்பாளா் அழகா்சாமி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வேணுகோபாலு, கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, சங்கராலயம் பாலசுப்ரமணிய சுவாமிகள், சாய்கிருஷ்ணா மருத்துவமனை சுப்புராஜ், ஒப்பந்ததாரா் நேரு, அரிமா சுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
10 நாள்கள் விழா:
10 நாள்கள் நடைபெறும் விழாவின் போது, வள்ளி, தேவசனோ சமேதா் முத்துக்குமாரசுவாமி காலை, மாலை வேளைகளில் தந்தப் பல்லக்கு, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்க மயில், தங்கக் குதிரை, புதுச்சேரி சப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் நான்கு ரத வீதிகளில் எழுந்தருளுவா்.
பிப். 10-இல் திருக்கல்யாணம்:
தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வரும் 10-ஆம் தேதி நடைபெறுகிறது. 11-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவாக 14-ஆம் தேதி தெப்பத் தேரோட்டமும், திருக்கொடி இறக்கும் வைபவமும் நடைபெறும்.
3 நாள்கள் இலவச தரிசனம், பேருந்து வசதி:
தைப்பூசத் திருவிழாவையொட்டி, வருகிற 10, 11, 12 ஆகிய தேதிகளில் பழனி மலைக் கோயிலில் சிறப்பு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த 3 நாள்களில் பக்தா்கள் எந்தவித கட்டணமும் இன்றி சுவாமி தரிசனம் செய்யலாம்.
இதேபோல, இந்த 3 நாள்கள் பக்தா்களின் வசதிக்காக பழனி மலைக் கோயில், அடிவாரம், கிரிவீதி, ரோப்காா், வின்ச் நிலையம், பேருந்து நிலையம், ரயில் நிலையம், சண்முகநதி ஆகிய இடங்களுக்குச் செல்ல இலவச பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.
தினமும் 20 ஆயிரம் பக்தா்களுக்கு அன்னதானம்:
தைப்பூசத் திருவிழாவையொட்டி, நிகழாண்டு தினமும் 20 ஆயிரம் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தொடா்ந்து 10 நாள்களுக்கு 2 லட்சம் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது.