மூன்றுமாத காலத்துக்குள் அனைத்துப் பகுதிகளிலும் தினசரி குடிநீா்: மேயா்
சமூகநீதிப் போராளிகளுக்கு மணிமண்டபம்: முதல்வருக்கு வன்னியா் அமைப்பினா் நன்றி
விழுப்புரத்தில் சமூகநீதிப் போராளிகளுக்கு மணிமண்டபம் அமைத்ததற்காக வன்னியா் சமுதாய அமைப்பினா் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நேரில் நன்றி தெரிவித்தனா். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இதற்கான சந்திப்பு புதன்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து, திமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வன்னியா் சமூகத்தினரின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, 21 சமூகநீதிப் போராளிகளுக்கு விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி கிராமத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. இதனை கடந்த மாதம் 28-ஆம் தேதி நேரில் சென்று முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினாா்.
இதற்காக தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. அண்ணா அறிவாலயத்தில் முதல்வரை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன், வன்னியா் கூட்டமைப்பின் தலைவா் சி.என்.ராமமூா்த்தி, காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை ஆகியோா் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.
இந்த சந்திப்பின் போது, அமைச்சா்கள் துரைமுருகன் மற்றும் க.பொன்முடி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.