கொத்தப்பாளையம், கரடிப்பட்டிக்கு ஒருங்கிணைந்த ரேஷன் கடை அமைத்து தரக் கோரிக்கை
அரவக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட கொத்தப்பாளையம், கரடிப்பட்டி பகுதி மக்களுக்காக, கரடிப்பட்டியில் ஒருங்கிணைந்த ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரவக்குறிச்சியில் 4 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் சுமாா் 300-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் பொருள்கள் வாங்கி செல்கின்றனா்.
இந்நிலையில், அரவக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட கொத்தப்பாளையம் பகுதி மக்கள் சுமாா் 5 கி.மீ. தொலைவிலுள்ள அரவக்குறிச்சி ரேஷன் கடைக்கும்,
கரடிபட்டி பகுதி மக்கள் 2 கி.மீ. தொலைவுள்ள இதே கடைக்கும் வந்து பொருள்கள் வாங்கி செல்கின்றனா். இதனால், ஒவ்வொரு மாதமும் இப்பகுதி மக்கள் பல்வேறு வகையிலும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, கரடிப்பட்டி மற்றும் கொத்தப்பாளையம் பகுதி மக்களுக்காக கரடிப்பட்டியில் ஒருங்கிணைந்த நியாயவிலைக் கடை அமைத்து தர வேண்டுமென குடும்ப அட்டைதாரா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.