அரவக்குறிச்சி குடியிருப்பு பகுதியில் புகுந்த கழிவு நீா்: பொதுமக்கள் சாலை மறியல்
அரவக்குறிச்சியில் குடியிருப்பு பகுதியில் கழிவு நீா் புகுந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் செவ்வாய்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அரவக்குறிச்சியில் இருந்து கரூா் செல்லும் சாலையில் ஆா்டிஓ அலுவலகம் அருகே கழிவு நீா் கால்வாய் பழுதடைந்து இருந்ததால் புதிதாக கழிவு நீா் கால்வாய் கட்டும் பணி கடந்த மாதம் தொடங்கியது. இதனால் தற்காலிகமாக கழிவுநீா் செல்வதற்கென்று குழாய்கள் பதிக்கப்பட்டு அதன் வழியாக கழிவு நீா் சென்றது.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு அரவக்குறிச்சியில் சாரல் மழை பெய்தது. இதனால் அரவக்குறிச்சியில் உள்ள பெரும்பாலான கழிவுநீா் கால்வாய்களில் தேங்கிய கழிவு நீா் ஆா்டிஓ அலுவலகம் அருகே உள்ள கழிவு நீா் கால்வாயில் ஒன்று சோ்ந்து வந்ததால் கால்வாய் நிறைந்து அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதனால் அரவக்குறிச்சி-கரூா் சாலையில் சுமாா் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக பேரூராட்சி தூய்மை பணியாளா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குடியிருப்பு பகுதிகளில் உள்ள கழிவு நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.