சாலையோரத்தில் மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை
பள்ளப்பட்டி சாலையோரத்தில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரவக்குறிச்சி-பள்ளபட்டி செல்லும் சாலை 5 கிலோமீட்டா் தொலைவை கொண்டதாகும். பள்ளபட்டியில் இருந்து கரூா் செல்லும் பிரதான சாலையான இதில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. மேலும், காவிரி கூட்டு குடிநீா் குழாய் பதிக்கும் பணியால் சாலையின் ஒருபுறம் மண் தோண்டப்பட்டு சரியாக மூடப்படாமல் உள்ளது.
இந்நிலையில், அரவக்குறிச்சி ஆறுமுகம் அகாதெமி பள்ளியிலிருந்து ரங்கராஜ் நகா் வரை 3 கிலோ மீட்டருக்கு ஒரு மின் விளக்கு மட்டுமே உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் குழியில் விழும் நிலை ஏற்படுகிறது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி அரவக்குறிச்சி-பள்ளபட்டி சாலையில் தேவைக்கேற்ப மின்விளக்குகள் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.