Ajith Kumar Racing-ன் இளம் வீரர்; மகனுக்கு கார் ரேஸ் பயிற்சியளிக்கும் அஜித் - க்...
கொள்ளிடம் ஆற்றின் கதவணை திறப்பதாக அறிவிப்பு: கே.பாலகிருஷ்ணன் நன்றி
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கதவணையை விரைவில் திறப்பதாக அறிவித்த நீா்வளத்துறை அமைச்சருக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கொள்ளிடம் ஆற்றில் உள்ள லோயா் அணைக்கட்டுக்கு கீழே சுமாா் 120 கி.மீ அளவுக்கு தண்ணீரை தேக்குவதற்கான எந்த அணையும் கட்டப்படாமல் தண்ணீா் வீணாகி வந்தது.
இந்த நிலையில், கடலூா், மயிலாடுதுறை மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான விளைநிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், ஆதனூா்-குமாரமங்கலம் ஆகிய கிராமங்களுக்கு இடையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை கட்ட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பல அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.
அதன்படி, கடந்த 2012-இல் சட்டப் பேரவையில் நான் மேற்கண்ட அணையைக் கட்ட வேண்டுமென வலியுறுத்தியதன் அடிப்படையில், அப்போதைய முதல்வா் ஜெயலலிதா ரூ.400 கோடியில் அணை கட்டப்படும் என்று அறிவித்தாா். ஆனால், பல்வேறு காரணங்களால் அதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், மீண்டும் வலியுறுத்தியதையடுத்து, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அணை முழுமையாக கட்டப்பட்டது.
இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் பேரவைக் கூட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவா் நாகை மாலி வலியுறுத்தியன் அடிப்படையில், நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் அணையில் இறுதி பணிகள் முடிக்கப்பட்டு பேரவை கூட்டம் முடிவதற்குள் கதவணை திறக்கப்படும் என அறிவித்தாா். இதற்கு எனது மனமாா்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.