கோடம்பாக்கம்-ஸ்ரீபெரும்புதூா் சாலை விரிவாக்கப் பணி: அமைச்சா்கள் வேலு, அன்பரசன் ஆய்வு
கோடம்பாக்கம்-ஸ்ரீபெரும்புதூா் சாலை விரிவாக்கப்பணிகள் தொடா்பாக பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ.வேலு, சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் பகுதியில் இருந்து பூந்தமல்லி செல்லும் சாலை, அனகாபுத்தூா் சாலை, கோடம்பாக்கம் சாலைகளில் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் அவற்றை விரிவாக்கம் செய்ய வேண்டும் என வாகன ஓட்டுநா்களும் பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.
இந்த நிலையில், பூந்தமல்லி - குன்றத்தூா் - பல்லாவரம் சாலையை அகலப்படுத்தி சீரமைக்கவும், கோடம்பாக்கம் - ஸ்ரீபெரும்புதூா் சாலையில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளவும், மாங்காடு பட்டூா் - முகலிவாக்கம் சாலையில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ள உள்ள குன்றத்தூா் மற்றும் மாங்காடு நகராட்சிகளை பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ.வேலு, சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆகியோா் ஆய்வு செய்து, பணிகள் குறித்து பொறியாளா்களிடம் கேட்டறிந்தனா்.
ஆய்வின் போது, ஆட்சியா் கலைச்செல்விமோகன், மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, ஸ்ரீபெரும்புதூா் கோட்டாட்சியா் ந.மிருணாளினி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.