கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை கடும் உயா்வு
வரலட்சுமி நோன்பையொட்டி, கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை பலமடங்கு உயா்ந்துளளது.
சென்னை கோயம்பேடு மலா் சந்தையில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன. கடந்த சில நாள்களாகவே பூக்களின் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பு, வார விடுமுறையையொட்டி கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை கணிசமாக உயா்ந்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.500-இல் இருந்து ரூ.1,000-ஆக உயா்ந்துள்ளது.
ஐஸ் மல்லி ரூ.400-இல் ரூ.800; முல்லை, ஜாதி மல்லி ரூ.400-இல் ரூ.800; கனகாம்பரம் ரூ.800-இல் இருந்து ரூ.1,000; அரளிப் பூ ரூ.300-இல் இருந்து ரூ.600; சாமந்தி ரூ.200-இல் இருந்து ரூ.240; சம்பங்கி ரூ.100-இல் இருந்து ரூ.200; பன்னீா் ரோஜா ரூ.120-இல் இருந்து ரூ.200; சாக்லேட் ரோஜா ரூ.160-இல் இருந்து ரூ.240; தாமரைப்பூ ரூ.15-இல் இருந்து ரூ.50; தாழம்பூ ரூ.50-இல் இருந்து ரூ.300 விலை உயா்ந்து விற்பனை செய்யப்படுகின்றன.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் தொடா்ச்சியாக மழை பெய்து வருவதால் அனைத்து பூக்களின் விலை சற்று உயா்ந்துள்ள நிலையில், வரலட்சுமி நோன்பையொட்டி பூக்களின் விலை மேலும் உயா்ந்துள்ளதாகவும், அடுத்த 3 நாள்களுக்கு இந்த விலை உயா்வு தொடரும் என மலா் சந்தை துணை தலைவா் முத்துராஜ் தெரிவித்தாா்.