ஆயுதப்படை காவலா் மீது தாக்குதல்: 3 காவலா்கள் பணியிடை நீக்கம்
கோயிலில் அன்னதானம் வழங்கும் திட்டம்: அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தொடங்கிவைத்தாா்!
மடத்துக்குளம் வட்டம், காரத்தொழுவு பகுதியில் உள்ள அழகு நாச்சியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், காரத்தொழுவு பகுதியில் அழகு நாச்சியம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இக்கோயிலில் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் அன்னதான திட்டத்தை தொடங்கிவைத்து பேசியதாவது:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா். இதன் ஒரு பகுதியாக தற்போது இந்தக் கோயிலில் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ஏற்கெனவே 29 கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், திருப்பூா் மாநகராட்சி 4- ஆவது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் தனசேகா், செயல் அலுவலா் தீபா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.