மாவட்டத்தில் 173 பயனாளிகளுக்கு ரூ.1.84 கோடி மதிப்பீட்டில் திருமண நிதியுதவி
திருப்பூா் மாவட்டத்தில் 173 பயனாளிகளுக்கு ரூ.1.84 கோடி மதிப்பீட்டில் திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்துக்கான தங்கம் ஆகியவற்றை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வழங்கினா்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் திருமணநிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என். கயல்விழி செல்வராஜ் ஆகியோா் 173 பயனாளிகளுக்கு ரூ.74.50 லட்சம் திருமண நிதியுதவி, 1.38 கிலோ திருமாங்கல்யத்துக்கான தங்கம் ஆகியவற்றை வழங்கினா்.
நிகழ்ச்சியில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:
திருப்பூா் மாவட்டத்தில் திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்துக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின்கீழ் 2021-22 ஆம் ஆண்டில் 2,200 பயனாளிகளுக்கு ரூ.9.15 கோடி மதிப்பீட்டில் திருமண நிதியுதவி மற்றும் 17.60 கிலோ தங்கம், 2022-23 ஆம் ஆண்டில் 325 பேருக்கு ரூ.1.58 கோடி மதிப்பீட்டில் திருமண நிதியுதவி மற்றும் 2.60 கிலோ தங்கம், 2023-24 ஆம் நிதியாண்டில் 545 பேருக்கு ரூ.2.28 கோடி மதிப்பீட்டில் திருமண நிதியுதவி மற்றும் 4.36 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளன. இதன் தொடா்ச்சியாக தற்போது 173 பயனாளிகளுக்கு ரூ.74.50 லட்சம் திருமண நிதியுதவி மற்றும் 1.38 கிலோ தங்கம் என மொத்தம் ரூ.1.84 கோடி மதிப்பீட்டில் திருமண நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மேயா் என்.தினேஷ்குமாா், துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மண்டலத் தலைவா்கள் பத்மநாபன், கோவிந்தராஜ், மாவட்ட சமூக நல அலுவலா் ரஞ்சிதாதேவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.